.webp)
-614531-555408.jpg)
Colombo (News 1st) வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இராஜினாமா செய்தனர்.
தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, நிலக்கரி விநியோகம் தொடர்பாக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க எடுத்த தீர்மானத்தை பாராட்டுவதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கரி இறக்குமதி மற்றும் அது சார்ந்த மின்சார உற்பத்தியின் போது முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற நிலக்கரி இறக்குமதிகள் குறித்து முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் மூலம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளமை மூலம் ஊழலுக்கு எதிராகவும் மக்கள் ஆணையை நிறைவேற்றுவதிலும் ஜனாதிபதி கொண்டுள்ள துணிச்சலான உறுதியையும் தாம் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள விசாரணைகள் சுயாதீனமாகவும் எவ்வித பக்கச்சார்புமின்றியும் முன்னெடுக்கப்படுமென தாம் நம்புவதாகவும் குமார ஜயகொடி கூறியுள்ளார்.
விசாரணைகள் நடைபெறும் காலப்பகுதியில் தாம் அந்தப் பதவியில் நீடிப்பது அதற்கு தடையாக இருக்கலாம் என்ற நிலைப்பாட்டில் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஆரம்பிக்கப்படவுள்ள விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதையும் அந்த விசாரணைகளின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு அதற்கு இடமளிக்கும் வகையில் தாம் வகிக்கும் செயலாளர் பதவியிலிருந்து விலகுவது பொருத்தமானது என தான் நம்புவதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தமது இராஜினாமா கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
