நிலக்கரி இறக்கமதி - ஜனாதிபதி ஆணைக்குழு

நிலக்கரி இறக்குமதி விவகாரம் - ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க திட்டம்

by Staff Writer 18-04-2026 | 7:45 PM

Colombo (News 1st) நாட்டில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நிலக்கரி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக கொழும்பில் அலுவலகமொன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நிலக்கரி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக உயர்நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்கவின் தலைமையில் முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று(17) நியமிக்கப்பட்டது.

1978 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்ட, தேசிய அரச சபையின் 1978 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் விதிகளுக்கு அமைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.  

ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே, மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி செயல்முறை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், நாட்டில் இடம்பெற்ற அனைத்து நிலக்கரி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.