நாளை(03) முதல் விசேட நீர் முகாமைத்துவ திட்டம்

by Staff Writer 02-04-2026 | 1:44 PM

Colombo (News 1st) நாளை(03) முதல் கொழும்பு நகரில் விசேட நீர் முகாமைத்துவ திட்டத்தின் கீழ் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நிலவும் வறட்சியான வானிலையின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இன்று(02) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போது தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்தார்.

நீர் உற்பத்தி மற்றும் விநியோகத்தை கண்காணித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்யும் நோக்கில் விசேட செயற்பாட்டு குழு  நியமிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் மற்றும் பொது முகாமையாளரின் ஊடாக விடயத்திற்கு பொறுப்பான அதிகாரிகளைக் கொண்டு இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் வறட்சியான வானிலையின் காரணமாக வேகமாக குறைந்து வரும் நீரேந்து பகுதிகளையும் அதன் விளைவாக ஏற்படும் குறைந்த உற்பத்தி திறனையும் வினைத்திறனாக நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.