.webp)

Colombo (News 1st) இன்று918) முதல் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைப்படி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்து ஏற்படும் நீண்ட வரிசையைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்தார்.
வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கம் இரட்டை அல்லது பூச்சியமாக இருப்பின் இரட்டை தினங்களிலும் ஏனைய வாகனங்களுக்கு ஒற்றை நாட்களிலும் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறினார்.
உதாரணமாக, இன்று 18ஆம் திகதி எனும் போது அது இரட்டை இலக்கமாகும். அதற்கமைய தத்தமது வாகனங்களின் இலக்கத் தகடுகளிலுள்ள இறுதி இலக்கம் இரட்டை இலக்கம் அல்லது பூச்சியம் எனின் குறித்த வாகன உரிமையாளர்கள் இன்று எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
0, 2, 4, 6, 8 ஆகிய இலக்கங்கள் இரட்டை இலக்கங்களாகும்.
நாளை 19ஆம் திகதி எனும் போது, அது ஒற்றை இலக்கமாகும். அதற்கமைய தத்தமது வாகனங்களின் இலக்கத் தகடுகளிலுள்ள இறுதி இலக்கம் ஒற்றை இலக்கம் எனின் நாளை எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமென அவர் விளக்கமளித்தார்.
1, 3, 5, 7, 9 ஆகிய இலக்கங்கள் ஒற்றை இலக்கங்களாகும்.
அத்துடன், எரிபொருள் விநியோகத்தின் போது கட்டாயம் QR குறியீட்டை உடன் வைத்திருப்பது அவசியமெனவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா அறிவுறுத்தினார்.
இதனூடாக 50 வீதத்திற்கும் அதிகமான வரிசைகளைக் குறைக்க முடியுமெனவும் அவர் கூறினார்.
எனினும் இது தொடர்பில் முன்னதாக அறிவிக்காமையின் காரணமாக இன்று இந்த செயன்முறை நடைமுறைப்படுத்தப்படாதெனவும் இன்று அனைவருக்கும் எரிபொருள் வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், ஒற்றை இலக்கத்தை கொண்ட வாகன சாரதிகள் முடிந்தவரை இன்று வரிசைகளில் காத்திருக்காமல் வீடுகளுக்கு செல்லுமாறும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், இதுவரை QR குறியீட்டை பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டவர்களுக்கு நாளை(19) விசேட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, QR குறியீட்டிற்கான பதிவின் போது பயன்படுத்திய தமது தொலைபேசி இலக்கங்கள் நினைவில் இல்லாத நபர்கள், தமது புதிய தொலைபேசி இலக்கங்களில் QR குறியீட்டை பதிவு செய்துகொள்வதற்கு இன்று மாலை அளவில் சந்தர்ப்பம் வழங்கப்படுமென அவர் கூறினார்.
QR குறியீட்டின் சிக்கல் காரணமாக இன்று எரிபொருள் பெற்றுக்கொள்ளாத நபர்கள் தமது வாகனத்தின் இறுதி இலக்கம் ஒற்றை இலக்கமோ இரட்டை இலக்கமோ எதுவாக இருந்தாலும் நாளை(19) அவர்களாலும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமென மேலும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்தார்.
