கைப்பற்றப்பட்ட படகு திக்கோவிட்ட துறைமுகத்திற்கு..

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகு திக்கோவிட்ட துறைமுகத்திற்கு..

by Staff Writer 12-03-2026 | 1:06 PM

Colombo (News 1st) போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை கடத்திய போது தெற்கு ஆழ்கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகு திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த படகு மற்றும் அதற்கு உதவியதாகக் கூறப்படும் மற்றுமொரு படகு என்பன கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட முதலாவது படகில் T-56 ரக, M-16 ரக துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கி என்பன கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த படகில் 08 கைத்துப்பாக்கிகளும் மெகசினும் மீட்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக்க சம்பத் தெரிவித்தார்.

அத்துடன் போதைப்பொருள் பொதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட 02 படகுகளிலிருந்த 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கொண்டு சென்றதாகக் கூறப்படும் படகு, நாட்டிற்கு தெற்கே உள்ள ஆழ்கடலில் கடற்படையினர் நேற்று(11) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டிருந்தது.

குறித்த படகின் உதவியதாக கூறப்படும் மற்றொரு படகு நேற்று கைப்பற்றப்பட்டிருந்தது.