.webp)

Colombo (News 1st) கிரேக்க பிணைமுறி கொடுக்கல் - வாங்கல் வழக்கில் இணக்கப்பாட்டிற்கு அமைய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் செலுத்த வேண்டிய 184 கோடி ரூபாவிற்கும் அதிக தொகையை செலுத்தியுள்ளாரா என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மத்திய வங்கியிடம் வினவியுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க, இலங்கை மத்திய வங்கிக்கு கடிதம் அனுப்பி இது தொடர்பில் வினவியுள்ளார்.
செலுத்த வேண்டியுள்ள தொகையை செலுத்தவில்லையெனில் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் 10ஆம் திகதி மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை நிபந்தனைகளுடனும் ஏனைய 03 பிரதிவாதிகளை நிபந்தனைகளின்றியும் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.
கப்ராலை விடுவித்த நிபந்தனைகளுக்கமைய இந்த கொடுக்கல் - வாங்கலால் ஏற்பட்ட 184 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை 03 மாதங்களுக்குள் இலங்கை மத்திய வங்கிக்கு செலுத்த வேண்டும்.
கிரேக்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த போது, கிரேக்க அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட பத்திரங்களை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 184 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், முன்னாள் பிரதி ஆளுநர் தர்மசேன தீரசிங்க, உதவி ஆளுநர்களான தொன் வசந்த ஆனந்த சில்வா மற்றும் எம்.ஏ.கருணாரத்ன ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
