.webp)

Colombo (News 1st) எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அமைவாக பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இடைக்கால பஸ் கட்டண மறுசீரமைப்பிற்கு இந்த எரிபொருள் விலைத்திருத்தம் பொருந்தாது என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.
இடைக்கால பஸ் கட்டண மறுசீரமைப்பிற்கு உரிய வீதத்தை விட குறைந்த அளவிலேயே டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
டீசல் விலை அதிகரிப்பிற்கு இணையாக பாடசாலை பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என பாடசாலை பஸ் உரிமையாளர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
பல தடவைகள் டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதும் கட்டணத்திருத்தங்களை மேற்கொள்ளாதிருந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் லலித் சந்திரசிறி தெரிவித்தார்.
கட்டணத்தை 5 வீதத்தால் அதிகரிக்க வேண்டிய தேவையேற்படுமென அவர் மேலும் கூறினார்.
பாடசாலை போக்குவரத்து கட்டணங்களை குறைந்தது 10 சதவீதமாவது அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுமென அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் குறிப்பிட்டார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா IOC நிறுவனங்களால் நேற்று(09) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 317 ரூபா
25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் புதிய விலை 365 ரூபா
22 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட டீசலின் புதிய விலை 303 ரூபா
24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட சுப்பர் டீசலின் புதிய விலை 353 ரூபா
13 ரூபாபால் அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் 195 ரூபாவிற்கு விற்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
