37 நாட்களுக்கு போதுமான பெட்ரோல் கையிருப்பில்..

37 நாட்களுக்கு போதுமான பெட்ரோல் கையிருப்பில்.. - பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

by Staff Writer 02-03-2026 | 4:05 PM

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் இன்று(02) முற்பகல் 9.45 வரை 2,325,349 லீட்டர் டீசலும் 2,904,000 லீட்டர் பெட்ரோலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

37 நாட்களுக்கு போதுமான பெட்ரோலும் 35 நாட்களுக்கு போதுமான டீசலும் நாட்டில் கையிருப்பில் உள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ. ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார். 

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லையென்பதால் அநாவசியமாக எரிபொருள் சேகரிப்பதை தவிர்க்குமாறு எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய டிப்போக்களிலும் விநியோக மத்திய நிலையங்களிலும் இன்றைய தினமும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெரல்கள், பாரியளவான சேமிப்பு கொள்கலன்கள் மற்றும் போத்தல்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி கூறியுள்ளார்.

இதனிடையே அநாவசியமாக எரிபொருட்களை சேகரித்து களஞ்சியப்படுத்துதல், எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்தல், எரிபொருள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்புதல் என்பனவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சில தரப்பினர் குழுக்களாக இணைந்து எரிபொருள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதால் மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை மீன்பிடி படகுகள், தொழிற்பேட்டைகள், நிர்மாண தொழில் பணியிடங்கள், விவசாய நடவடிக்கைகளுக்காக அன்றி வேறு தரப்பினருக்கு பாரிய கொள்கலன்களிலோ, போத்தல்களிலோ எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்காமலிருப்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலைய முகாமைத்துவ அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.