இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

by Staff Writer 02-03-2026 | 4:16 PM

Colombo (News 1st) மத்திய கிழக்கில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் அவர்கள் தொடர்பான தகவல்களை ஆராய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

எந்தவொரு அவசர சந்தர்ப்பத்திலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பில் பணியகத்தினால் தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.

தொழிலாளர்களுக்கு ஏதேனும் தேவையேற்படின் உடனடியாக தாம் வசிக்கும் நாட்டின் தூதரகங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியுமென மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சேவையாற்றும் இலங்கையர்களுக்கு பணியகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

0094 704776008 எனும் Whatsapp இலக்கத்தின் ஊடாக 24 மணித்தியாலங்களும் பணியகத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும்.

பணியகத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1989 எனும் இலக்கத்தினூடாகவும் தகவல்களை வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு வெளிவிவகார அமைச்சு பிராந்தியத்தில் உள்ள இலங்கையர்களுக்கு தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

. நம்பகமான உள்ளூர் ஊடகங்கள் மற்றும் அந்தந்த நாட்டின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு அமைய செயற்படுதல்

. அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்தல் மற்றும் பொதுக் கூட்டங்களை தவிர்த்தல்

. அருகிலுள்ள இலங்கை இராஜதந்திர தூதரகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருத்தல்.

. கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ் செய்து வைத்திருத்தல்

. அனைத்து சந்தர்ப்பங்களிலும் செல்லுபடியாகும் அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களை எடுத்துச்செல்லல் ஆகிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கையில் உள்ள குடும்பங்கள், மத்திய கிழக்கிலுள்ள தமது உறவினர்களின் நிலைமை தொடர்பில் அறிந்துகொள்வதற்காக 24 மணித்தியாலங்களும் சேவையில் ஈடுபடும் அழைப்பிலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவின் 0742 595 546 எனும் இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.