.webp)
-554319.jpg)
COLOMBO (News 1st) - மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமை காரணமாக தமது நாடுகளுக்கு திரும்பிச்செல்ல முடியாத நிலையில் சுமார் 10,000-இற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டில் தங்கியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவர்களில் 6000 பேர் வரையிலானோர் சுற்றுலா பெக்கேஜ்களின் கீழ் நாட்டிற்கு வருகை தந்தவர்கள் என அதன் தலைவர் புத்திக ஹேவாவசம் கூறினார்.
அவர்களுக்கு தேவையான வசதிகள் சுற்றுலா பிரதிநிதிகளின் தலையீட்டின் அடிப்படையில் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்.
தங்குமிட வசதிகள் அல்லது உணவு வசதிகள் தொடர்பில் சிக்கல்கள் காணப்படும் சுற்றுலாப் பயணிகள் 1912 என்ற துரித அழைப்பு இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தேவையான வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
யுத்த நிலைமை காரணமாக தற்போது மூடப்பட்டுள்ள விமான நிலையங்களில் சிக்கியுள்ள உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகள் அந்தந்த விமான நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்தார்.
மோதல் நிலைமை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடிதங்கள் மற்றும் பொதிகளை விநியோகிக்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்படலாம் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாகும்.
இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடிதங்கள் மற்றும் பொதிகளை அனுப்புவதற்கு முன்னதாக அது தொடர்பில் தபால் அலுவலங்களில் கேட்டறியுமாறு தபால் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
