பொதுமக்கள் அவசர கால நிலைமை மீள நீடிப்பு

பொதுமக்கள் அவசர கால நிலைமை மீள நீடிப்பு

by Staff Writer 02-03-2026 | 7:40 PM

COLOMBO (News 1st) - நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொதுமக்கள் அவசர கால நிலைமை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் இதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. 

வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய பொதுமக்கள் அவசர கால நிலைமை கடந்த 28ஆம் திகதி முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் அவசர கால நிலைமை காணப்படுவதை கருத்திற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வளங்கள் மற்றும் தேவைகளை பேணுவதற்காக அவசர கால நிலைமை இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர கால விதிமுறைகளைப் பயன்படுத்தி மக்களின் சிவில் உரிமைகளை மீறும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ஏற்கனவே உறுதியளித்திருந்தார்.

இதேவேளை 15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியும் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. 

மின்சாரம், எரிபொருள், சுகாதார சேவை, போக்குவரத்து, வீதிகள், நீர், உணவு, மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கள அதிகாரிகள், அம்பியூலன்ஸ்கள், மத்திய வங்கி, அரச வங்கிகள், காப்பீட்டு சேவைகள், நீர்ப்பாசனம், தொலைபேசி, தொலைத்தொடர்பு மற்றும் ஊடகங்கள், தாழ்நில மீட்பு, விவசாயம் மற்றும் விவசாய காப்பீட்டு ஆகிய சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.