''தேவையற்ற அச்சுறுத்தல் விடுக்க வேண்டாம்''

விசாரணைகளின் போது மைத்ரி விக்கிரமசிங்கவிற்கு தேவையற்ற அச்சுறுத்தல் விடுக்க வேண்டாம் - புத்திஜீவிகள் அறிக்கை

by Staff Writer 24-02-2026 | 7:13 PM

Colombo (News 1st) விசாரணைகளின் போது, ரணில் விக்கிரமசிங்கவின் மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவிற்கு தேவையற்ற அச்சுறுத்தல்கள் விடுக்கவோ அல்லது அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொள்ள வேண்டாமென கோரி ஒரு குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Wolverhampton பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக பொதுமக்களின் பணத்தை பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கு விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குமாறு பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவிற்கு அண்மையில் அறிவிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் வௌிக்கொணரப்பட்டது.

பொது பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்கள் குறித்த எந்தவொரு விசாரணை நடவடிக்கையும் நியாயமான, வெளிப்படையான மற்றும் உரிய நடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவிற்காக வெளியிடப்பட்ட ஏகோபித்த ஒற்றுமைக்கான ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த செயன்முறை முதன்மையாக அரசியலுடன் தொடர்புடைய ரணில் விக்கிரமசிங்கவை மையப்படுத்திய நடைமுறைகளுக்குள் இழுக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல்களில் இருந்து கல்விமான்களைப் பாதுகாப்பது ஒரு ஜனநாயக சமூகத்தின் இன்றியமையாத அங்கமெனவும் பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் தொழில்முறை சுதந்திரம், கௌரவம் மற்றும் அவரது புகழ்பெற்ற சேவை வரலாற்றை பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசமானி ராதிகா குமாரசுவாமி, கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ, கலாநிதி சுபாங்கி ஹேரத், கலாநிதி ரேணுகா பத்திரன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேரியல் அஷ்ரப் உட்பட 50-இற்கும் மேற்பட்டோர் இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.