சிறைச்சாலைகளுக்கு புதிய திட்ட நடவடிக்கை

சந்தேகநபர்களை வீட்டுக்காவலில் வைக்க அனுமதிக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை

by Staff Writer 20-02-2026 | 12:34 PM

COLOMBO(News1st) - சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலை குறைப்பதற்காக சந்தேகநபர்களை தடுப்புக் காவலில் வைப்பதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்துள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று  (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். 

நீதியரசர் யசந்த கோதாகொடவுடன் இது தொடர்பில் இணைந்து செயற்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

இலத்திரனியல் கண்காணிப்பு முறைமையின் ஊடாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்தார். 

இதனூடாக சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியைக் குறைக்க முடியும் என அவர் கூறினார். 

குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள 10,000 அளவிலான கைதிகளினால் சிறைச்சாலைகளில் பாரிய அளவிலான நெருக்கடி ஏற்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார். 

எனினும், சந்தேகநபர்களாக உள்ள 28,000 பேரை சிறைச்சாலைகளில் தடுத்து வைத்திருப்பது தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதாக  அவர் தெரிவித்தார்.

இதற்கமைய சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். 

அதேபோன்று சிறைச்சாலைகளில் காணப்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் படிப்படியாக தீர்வு வழங்கப்படுமென நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்தார்.