.webp)

Colombo (News 1st) இலங்கையில் முன்னெடுக்கப்படும் பாரியளவான முதலீடுகளுக்காக 10 வருடங்கள் வரையான நீண்ட கால நிறுவனம் சார் வரிச்சலுகையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2008 இலக்கம் 14 இலங்கை புதிய மூலோபாய அபிவிருத்தி செயற்றிட்டங்கள் சட்டத்தின் கீழ் கடந்த 08ஆம் திகதி வௌியிடப்பட்ட இந்த அதிவிசேட வர்த்தமானிக்கு அமைவாக உட்கட்டமைப்பு வசதிகள், சுற்றுலா, உற்பத்தி, விவசாயம், கல்வி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல பிரதான துறைகளுக்கான பாரியளவு முதலீடுகளுக்காக வரிச்சலுகை கிட்டவுள்ளது.
இதற்கு முன்னர் காணப்பட்ட 25 வருடங்கள் எனும் அதிகபட்ச வரிச்சலுகை கால எல்லையை 10 வருடங்களுக்கு மட்டுப்படுத்தி அதிக வெளிப்படைத்தன்மையுடன் முதலீட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை இதன் முக்கிய அம்சமாகும்.
இந்த புதிய விதிமுறைகளின் கீழ் 03 பிரதான பிரிவுகளின் கீழ் முதலீட்டு வேலைத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஏ பிரிவில் உட்கட்டமைப்பு வசதிகள், சுற்றுலா மற்றும் கசினோ தவிர்ந்த ஏனைய களியாட்ட துறைகளுக்கான முதலீடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த பிரிவில் 300 மில்லியன் அமெரிக்க டொலரை விடவும் அதிகூடிய முதலீட்டுக்காக 10 வருட வரி தள்ளுபடி வழங்கப்படுவதுடன், இதனூடாக குறைந்தபட்சம் 100 உள்நாட்டு தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, உற்பத்தி துறையின் முதலீட்டு வேலைத்திட்டங்கள், பீ பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் 150 மில்லியன் அமெரிக்க டொலரை விடவும் அதிகரித்த முதலீடுகளுக்காக 10 வருடங்களுக்கான வரிச்சலுகை கிட்டவுள்ளது.
இதில் 250 உள்நாட்டு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டியது கட்டாயமானதாகும்.
விவசாயம், கல்வி, தொழினுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்கான முதலீடுகள் சீ பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
150 மில்லியன் அமெரிக்க டொலரை விடவும் அதிக முதலீடுகள் இதில் உள்ளடங்குவதுடன் இதற்காக 10 வருட வரிவிலக்கு வழங்கப்படுகின்றது.
அத்துடன், இங்கு குறைந்தபட்சம் 50 தொழில்வாய்ப்புகளேனும் உருவாக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிச்சலுகைகளுக்கு மேலதிகமாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் காலப்பகுதிக்குள் மூலதன பொருட்கள் மற்றும் நிர்மாணப் பொருட்களின் இறக்குமதியின் போது,
CID எனப்படும் சுங்க இறக்குமதி வரி,
VAT எனப்படும் பெறுமதிசேர் வரி,
PAL எனப்படும் துறைமுகங்கள் மற்றும்
விமான நிலைய அபிவிருத்தி வரி,
செஸ் வரி என்பவற்றிலிருந்தும் விலக்களிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
எவ்வாறாயினும், தனிப்பட்ட பாவனைக்காக இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு இந்த வரிச்சலுகை பொருந்தாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
