.webp)

Colombo (News 1st) இருபதுக்கு20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை தனது இரண்டாவது வெற்றியை இன்று பதிவுசெய்தது.
ஓமானுக்கு எதிராக இலங்கை அணி 105 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.
கண்டி பல்லேகெலே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தது.
குசல் மென்டிஸ் - பவன் ரத்நாயக்க ஜோடி 3ஆம் விக்கெட்டுக்காக 8.2 ஓவர்களில் 94 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

பவன் ரத்நாயக்க 28 பந்துகளில் ஒரு சிக்ஸர் 8 பௌண்டரிகளுடன் 60 ஓட்டங்களைப் பெற்றார்.
சர்வதேச இருபதுக்கு20 போட்டியில் குறைந்த பந்துகளில் அரைச்சதமடித்த வீரராக தசுன் ஷானக இன்று சாதனை படைத்தார்.

அந்த இலக்கை அவர் 19 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகளுடன் எட்டினார்.
தசுன் ஷானக - குசல் மென்டிஸ் ஜோடி 4ஆம் விக்கெட்டுக்காக 63 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

சர்வதேச இருபதுக்கு20 வரலாற்றில் 2500 ஓட்டங்களைக் கடந்த முதல் இலங்கையராக குசல் மென்டிஸ் பதிவானார்.
இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ஓட்டங்களைக் குவித்தது.
இது இம்முறை போட்டித் தொடரில் ஓர் அணி பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.
மாபெரும் வெற்றி இலக்கான 226 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய ஓமான் 5.5 ஓவர்களில் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மொஹமட் நதீம் 53 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.
ஓமான் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்சன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக பவன் ரத்நாயக்க தெரிவானார். இந்த வெற்றியின் மூலம் இருபதுக்கு20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பி குழுவில் புள்ளிகள் பட்டியலில் இலங்கை முன்னிலைப் பெற்றுள்ளது.
இலங்கை அணி விளையாடும் அடுத்த போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை அவுஸ்திஸ்திரேலியாவுக்கு எதிராக கண்டி பல்லேகெலே மைதானத்தில் மின்னொளியில் நடைபெறவுள்ளது.
