சமன் ஏக்கநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்..

by Staff Writer 11-02-2026 | 9:21 PM

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்ச்சைக்குரிய வெளிநாட்டு பயணத்தின் போது அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோர் அரச நிதியை துஷ்பிரயோகம் செய்துள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று(11) அறிவித்தார்.

குறித்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் 02ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் 18ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் இன்று உத்தரவிடப்பட்டது.

166 இலட்சம் ரூபா அரச நிதியை துஷ்பிரயோகம் செய்து இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சமன் ஏக்கநாயக்க சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்த மேலதிக அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்து விளக்கமளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், 02ஆவது சந்தேகநபர் சிறைச்சாலையில் இருந்தபோது வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் இவ்வாறு அறிவித்தார்.

மேற்கோள் ஆரம்பம்
நீதவான் அவர்களே, இந்த 02ஆவது சந்தேகநபர் ஊழல்வாதி என நான் கூறவில்லை. ஆனால் அவர் ஒரு அனுபவம் வாய்ந்த குற்றவாளியை போன்று செயற்பட்டுள்ளார். விசாரணை அதிகாரிகள் இறுதியாக இவரிடம் பதிவுசெய்துள்ள வாக்குமூலத்தில் இவர் தனது நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியுள்ளார். முதலாவது சந்தேகநபரான ரணில் விக்கிரமசிங்க 'டிரான்சிட்டாக லண்டனுக்கு சென்றதாகவும் வுல்வர்ஹெம்டன் பல்கலைக்கழகத்திற்கு அல்லது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்கு அவர் செல்வது குறித்து தாம் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேற்கோள் நிறைவு

கடந்த வழக்கு தவணையின் போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி வுல்வர்ஹெம்டன் பல்கலைக்கழகத்திற்கு இந்த பட்டமளிப்பு விழா தொடர்பான 9 வினாக்கள் அடங்கிய பட்டியல் ஃபேக்ஸ் மற்றும் பதிவுத்தபால் மூலம் அனுப்பப்பட்டதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

மேற்கோள் ஆரம்பம்
நீதவான் அவர்களே, கடந்த வழக்கு தவணையின் போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய வுல்வர்ஹெம்டன் பல்கலைக்கழகத்திடம் இந்த பட்டமளிப்பு விழா குறித்து 9 கேள்விகள் வினவப்பட்டுள்ளன. அதற்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை. விசாரணைகளுக்கு தேவையான விடயங்களை உறுதிப்படுத்தும் வகையில் அந்த 09 கேள்விகளும் முறையாக அனுப்பப்பட்டுள்ளன
மேற்கோள் நிறைவு

இதன்போது விசாரணை தொடர்பாக ஏதேனும் கட்டளைகளை எதிர்பார்க்கிறீர்களா என மேலதிக சொலிசிட்டர் ஜெனரலிடம் நீதவான் வினவினார்.

அதற்கு பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், சர்ச்சைக்குரிய இந்த பயணம் தொடர்பாக 2023 நவம்பர் முதலாம் திகதியிடப்பட்ட கடிதத்திலுள்ள கையெழுத்தை பரிசோதிக்க அதனை அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த வேண்டுகோளை கவனத்திற்கொண்ட நீதவான் அதற்கு அனுமதி வழங்கினார்.

அதனை தொடர்ந்து 02ஆவது சந்தேகநபரான சமன் ஏக்கநாயக்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ பிணை கோரிக்கையை முன்வைத்தார்.

மேற்கோள் ஆரம்பம்
நீதவான் அவர்களே, எனது சேவைபெறுநர் வுல்வர்ஹெம்டன் பல்கலைக்கழகத்திற்கு செல்லவில்லை, லண்டன் பயணத்திற்கும் செல்லவில்லை. இந்த சர்ச்சைக்குரிய விமானப் பயணத்திற்கும் அவருக்கும் தொடர்பில்லை. அவர் 39 வருடங்கள் அரச சேவையில் இருந்த ஒரு அதிகாரி. முதலாவது சந்தேகநபர் 'டிரான்சிட்' பயணமாகவே லண்டன் செல்கின்றார் என்பது மட்டுமே தனக்கு தெரியும் என அவர் ஏற்கனவே வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வௌியாட்டு பயணம் குறித்து அவருக்கு முதலில் 2023 செப்டம்பர் 7ஆம் திகதியே மின்னஞ்சல்  கிடைத்தது. பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவினால் வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பப்பட்டு, அதன் பின்னரே ஜனாதிபதி செயலகத்திற்கு அது கிடைத்துள்ளது. அதன் பின்னரே எனது சேவைபெறுநர் இந்த பயணம் தொடர்பில் அறிந்துகொண்டார்
மேற்கோள் நிறைவு

தனது சேவைபெறுநர் நிதியை அங்கீகரிக்கும் பணியை மாத்திரமே செய்ததாகவும் அதன் மூலம் அவர் எவ்வித இலாபமோ அல்லது சலுகையோ பெறவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.

மேற்கோள் ஆரம்பம்
நீதவான் அவர்களே, பிரித்தானியாவிற்கான உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவினால் தயாரிக்கப்பட்ட செலவு விபரங்களின் அடிப்படையிலேயே எனது சேவைபெறுநர் இந்த நிதியை அங்கீகரித்துள்ளார். 

அதனை நிராகரிக்கவோ, கேள்வி கேட்கவோ அல்லது தீர்மானம் எடுக்கவோ அவருக்கு அதிகாரம் இல்லை. அவர் கடிதத்திற்கு அமைய நிதி ஒதுக்கீட்டை மட்டுமே செய்துள்ளார். நிதி ஒதுக்கீட்டில் ஏதேனும் சிக்கல் இருந்திருந்தால் அதனை வெளிவிவகார அமைச்சே நிராகரித்திருக்க வேண்டும். எனது சேவைபெறுநரால் இதனை செய்ய முடியாது. ஆகவே நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டமை தொடர்பில் அவர்மீது குற்றஞ்சுமத்த முடியாது. இந்த விசேட காரணங்களை கருத்திற்கொண்டு தகுந்த நிபந்தனையின் அடிப்படையில் எனது சேவைபெறுநருக்கு பிணை வழங்குமாறு நான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கின்றேன்
மேற்கோள் நிறைவு

இந்த பிணை கோரிக்கைக்கு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிசும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மேற்கோள் ஆரம்பம்
நீதவான் அவர்களே, முதலாவது சந்தேகநபர் 'டிரான்சிட்' பயணமாகவே லண்டன் செல்கிறார் என தெரிந்திருந்தும் 36 மணித்தியால காலப்பகுதிக்கு 166 இலட்சம் ரூபா அரச நிதி  பெறப்படுகின்றமை குறித்து அவர் முதலாவது சந்தேகநபரிடம் வினவியிருக்க முடியும். நாடு வங்குரோத்து அடைந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த ஒரு காலப்பகுதியிலேயே 36 மணித்தியாலங்களுக்கு இந்த தொகையை அவர் அங்கீகரித்துள்ளார். நீதவான் அவர்களே, இந்த பயணம் குறித்த முதல் கடிதம் அவருக்கு 2023 செப்டம்பர் முதலாம் திகதியே கிடைத்துள்ளது. இப்போது அவர் அனைத்தையும் சரோஜா சிறிசேன மீது சுமத்தப் பார்க்கிறார். அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மற்றும் பிரத்தியேக செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரேரா ஆகியோரும் இந்த பயணத்தில் இணைந்து அரச நிதியை துஷ்பிரயோகம் செய்துள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு நான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளேன். இந்த சந்தேகநபர் கடந்த முறை விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது, சிறைச்சாலை பஸ்ஸில் இருகைகளையும் உயர்த்தி 'ஜயவேவா' என கூறி ஊடகங்களுக்கு சைகை காட்டினார். அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஒரு சந்தேகநபர் எப்படி அவ்வாறு நடந்து கொள்ள முடியும்? இவரை சந்திக்க முதலாவது சந்தேகநபரும் மற்றுமொருவரும் சென்றுள்ளனர். இதனால் சாட்சிகளுக்கு அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இவருக்கு பிணை வழங்கக்கூடாது. நீதவான் அவர்களே சந்தேகநபருக்கு பிணை வழங்கப்படுவதை நான் ஆட்சேபிக்கின்றேன்
மேற்கோள் நிறைவு

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார, விளக்கமறியலில் வைக்கப்படும் ஒரு சந்தேகநபரின் சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுவதாகவும் இவ்வாறான நிலையில் சந்தேகநபரின் நடத்தை குறித்து அவதானிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இல்லையெனில் அது குறித்து நீதிமன்றம் தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கும் எனவும் நீதவான் சுட்டிக்காட்டினார்.

பிணை வழங்குவது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.