பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

by Staff Writer 09-02-2026 | 4:14 PM

Colombo (News 1st) திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டுமானம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கரையோரப் பாதுகாப்பு சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத கட்டுமானம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சந்தேகநபர்களுக்கு எதிரான விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கோட்டை வீதியில் உள்ள ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி போதிராஜ விகாரைக்கு சொந்தமானதாகக் கூறப்படும் காணியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை பொலிஸார் அகற்றுவதற்கு முயற்சிப்பதாகக் கூறி கடந்த வருடம் நவம்பர் மாதம் 16ஆம் திகதி பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினர் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

எனினும் குறித்த காணியில் கடற்கரைக்கு அருகில் உணவகம் அமைக்கப்பட்டிருப்பது பின்னர் தெரியவந்தது.

கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினர் உணவகத்தை அகற்றுவதற்கு முயற்சித்தமை​யே எதிர்ப்பிற்கான பிரதான காரணம் என்பது இதனையடுத்து உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத கட்டுமானம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 11 சந்தேகநபர்கள் பெயரிடப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலையான பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் மற்றும் ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாண வங்ஷதிஸ்ஸ தேரர் ஆகியோரும் இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்களில் உள்ளடங்குகின்றனர்.

ஏனைய செய்திகள்