.webp)

Colombo (News 1st) பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(03) உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
திருகோணமலை காணி விவகாரம் தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் கரையோர பாதுகாப்பு சட்டத்தை மீறியமை மற்றும் அத்துமீறிய நிர்மாணம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களை எதிர்வரும் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் நேற்று(02) உத்தரவிட்டது.
பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு மேலதிகமாக ஸ்ரீசம்புதத்துவ ஜயந்தி விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச தேரர், திருகோணமலை சுகிதவம்ச திஸ்ஸ தேரர், திருகோணமலை நந்த தேரர், குறித்த காணியிலுள்ள ஹோட்டலை குத்தகையின் அடிப்படையில் முன்னெடுத்துச் செல்வதற்கு தலையீடு செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் தீபானி லியனகே, விதுரங்க லொக்குகலப்பத்தி, எல்.டி.பெரேரா, பியல் பிரேமசிறி, லுதார குணதிலக்க, சுதீபா லியனகே, சுகத் பிரசன்ன உள்ளிட்ட 10 சந்தேகநபர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
