.webp)
-553512.jpg)
COLOMBO (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.
பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி , பெருந்தோட்ட நிறுவனங்களின் தலைவர் சுனில் போலியத்த ஆகியோருக்கு இடையில் சம்பள அதிகரிப்பு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
பெருந்தோட்ட நிறுவனங்களின் தலைவர்கள் , பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1350 ரூபா சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பதற்கான ஒப்பந்தமாக இது அமைந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்துக்கு அமைய பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் வருகைக்கான கொடுப்பனவாக அரசாங்கம் 200 ரூபாவை வழங்குகின்றது.
பெருந்தோட்ட நிறுவனங்களுடனும் முதலாளிமார் சம்மேளனத்துடனும் இலங்கை சேவை சங்கத்துடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாகவும் ஜனவரி மாதத்துக்காக அரசாங்கம் வழங்கும் 200 ரூபா சம்பளமும் பெருந்தோட்ட நிறுவனங்கள் வழங்கும் 200 ரூபாவுடன் இணைந்ததாக 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா அடிப்படை சம்பளம் கிடைக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உள்ளிட்ட பலர் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1750 ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்திருந்தார்.
