இலங்கை வரவுள்ள IMF முகாமைத்துவ பணிப்பாளர்

IMF முகாமைத்துவ பணிப்பாளர் அடுத்த மாதம் இலங்கை வருகிறார்

by Staff Writer 29-01-2026 | 8:06 PM

Colombo (News 1st) டித்வா புயலால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களை மீட்டெடுக்கும் செயற்பாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் உயர்ந்தபட்ச ஒத்துழைப்புக்களை வழங்குமென அதன் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளது.

அவர்கள் நேற்று(28) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர்.

இலங்கைக்கு நான்காவது முறையாக வருகை தந்துள்ளதற்கமைய அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவை  நேரில் கண்ட நிலையில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டார்.

பலமுறை கொழும்புக்கு கூட்டங்களுக்காக மாத்திரம் வருகை தந்திருந்த போதும் இந்த முறை கொழும்புக்கு வெளியே தாம் சென்றதில் பல விடயங்களை கற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாணய நிதிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை பரிசீலிப்பது மாத்திரம்  தமது விஜயத்தின் ​நோக்கம் அல்லவெனவும்  நாணய நிதியம் இலங்கையுடன் இருப்பதை உறுதி செய்வதும் இந்த விஜயத்தின் நோக்கமென்றும் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் மேலும் கூறினார்.