மகாராஷ்டிரா துணை முதல்வர் விமான விபத்தில் பலி

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 28-01-2026 | 5:58 PM

Colombo (News 1st) இந்தியாவின் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் இன்று(28) உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் உதவியாளர்கள் மற்றும் விமான ஊழியர்கள் இருவர் அடங்கலாக மொத்தம் ஐவர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அஜித் பவார் மறைவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தனது தொகுதியான பாராமதியில் நடைபெறவிருந்த 04 பொது கூட்டங்களில் பங்கேற்பதற்காக அஜித் பவார் இன்று காலை மும்பையிலிருந்து சிறிய ரக விமானத்தின் மூலம் பயணித்துள்ளார்.

பாராமதியில் விமானம் தரையிறங்க முயன்ற போது விமான நிலைய ஓடுபாதை அருகே விபத்திற்குள்ளாகி தீப்பிடித்துள்ளது.

66 வயதான அஜித் பவார், 1991ஆம் ஆண்டு பாராமதி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1991 முதல் 2019 வரை பாராமதி தொகுதியில் போட்டியிட்டு 07 தடவைகள் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளதுடன் சுமார் 32 வருடங்களுக்கும் அதிக காலம் பாராமதி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

1999ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் நீர்வளத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

1999ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை அணைகள் நிர்மாணிப்பதில் ஊழல் செய்ததாகவும் 2005 முதல் 2010 வரை கூட்டுறவு வங்கிகளில் கடன் மோசடி குற்றச்சாட்டு அஜித் பவார் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.