அருட்தந்தையை தாக்கிய 06 பொலிஸார் பணி இடைநீக்கம்

அருட்தந்தையை தாக்கிய 06 பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணி இடைநீக்கம்

by Staff Writer 27-01-2026 | 4:39 PM

Colombo (News 1st) கத்தோலிக்க அருட்தந்தையொருவரை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 06 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பணி இடைநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தியோகத்தர்களில் 03 சார்ஜன்ட்களும் 03 கான்ஸ்டபிள்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.

சந்தேகநபர்களான 06 பொலிஸ் உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா பிரதம நீதவான் சீலனி பெரேரா முன்னிலையில் வழக்கு நேற்று(26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்களை அன்றைய தினம் அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜர்ப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் கத்தோலிக்க அருட்தந்தை தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நெவில் அபேரத்ன நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

கத்தோலிக்க அருட்தந்தை வழங்கிய முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.