அம்புலுவாவ குடியிருப்புகளுக்கு மண்சரிவு அபாயம்

அம்புலுவாவ மலையடிவார குடியிருப்புகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ள தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம்

by Staff Writer 19-01-2026 | 2:11 PM

Colombo (News 1st)-  

மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரியும் அதி அபாயம் நிலவும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதால் கம்பளை அம்புலுவாவ மலை அடிவாரத்திலுள்ள 23 வீடுகளைச் சேர்ந்தவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் பரிந்துரைத்துள்ளது. 

அதி ஆபத்து நிலவும்  வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் கட்டுமானப் பணிகள் அல்லது அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடாது என்பதுடன்  இந்தப் பகுதிகள் மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதிகளாக கருதி  பாதுகாக்கப்படவேண்டும் எனவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் பரிந்துரைத்துள்ளது. 

டித்வா புயலை  அடுத்து கம்பளை அம்புலுவாவ மலைப்பிரதேசத்தை அண்மித்து மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரியும் அபாயம் தொடர்பில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் டிசம்பர் 19 ஆம் திகதி கள ஆய்வினை முன்னெடுத்தது. 

அது தொடர்பில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இதுவரை உடபலாத்த பிரதேச செயலாளரிடம் 03 அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது. 

அம்புலுவாவ மலைப் பகுதியில் 03 இடங்கள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மேலும் 23 வீடுகளை மத்திய ஆபத்துள்ள இடங்களாக அடையாளம் கண்டுள்ளது. 

மழை வீழ்ச்சியின் அளவு 75 மில்லிமீற்றருக்கு அதிகமாக காணப்பட்டால் சம்பந்தப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதுடன் 24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லிமீற்றருக்கு அதிகமாக மழைவீழ்ச்சி பதிவானால் அவதானத்துடன் இருக்க வேண்டும் என நிறுவகத்தின் முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

24 மணித்தியாலங்களில் 150 மில்லிமீற்றருக்கு அதிகமாக அல்லது மணித்தியாலத்திற்கு 75 மில்லிமீற்றருக்கு அதிகமாக மழைவீழ்ச்சி கிடைத்தால் சம்பந்தப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் தற்காலிகமாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவுகளுக்கு மத்திய ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் கம்பளை ஜினராஜ ஆண்கள் வித்தியாலயம் மற்றும் ஜினராஜா மாதிரி ஆரம்ப பாடசாலை ஆகியன அமைந்துள்ளன. 

கடந்த வருடம் நவம்பர் 27 ஆம் திகதி ஜினராஜ வித்தியாலயத்தின் ஆசிரியரொருவர் அம்புலுவாவ மலையிலிருந்து நீர் மற்றும் பாறைகளால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

பின்னர் அவரது சடலம் ஜினராஜ ஆண்கள் வித்தியாலயத்தின்  விளையாட்டு மைதானத்தில் மண்ணில் புதையுண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. 

கம்பளை ஜினராஜ வித்தியாலயம் மற்றும் ஜினராஜ மாதிரி ஆரம்ப பாடசாலை ஆகியவை மத்திய ஆபத்துள்ள பகுதிகளாகக் கருதப்பட வேண்டும் என 02 பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக உடபலாத்த பிரதேச செயலாளர் தெரிவித்தார்.