யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான 'முழு நாடும் ஒன்றாக'

“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்பாட்டின் வட மாகாண நிகழ்ச்சி திட்டம்

by Staff Writer 16-01-2026 | 7:03 PM

COLOMBO (News 1st) 

போதைப்பொருளின் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் ‘முழுநாடும் ஒன்றாக’ தேசிய செயற்றிட்டத்தின் வடக்கு மாகாண செயற்றிட்டம் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று ஆரம்பமானது. 

நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு மக்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் அடைக்கலம் கொடுக்காத அரசாங்கமொன்றை நாட்டு மக்கள் கட்டியெழுப்பியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார். 

போதைப்பொருள் பரவலை தோற்கடிக்க தாம் ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போதைப்பொருள் ஒழிப்புக்கு பங்களித்த வடக்கு மாகாண பொலிஸ் உத்தியோகத்தர்களைப் பாராட்டும் நிகழ்வும் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை பொலிஸாரும் இராணுவத்தினரும் போதைப்பொருளை தோற்கடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயற்படுகின்றனர். அதற்கு பொதுமக்களின் ஆதரவு தேவைப்படுகிறது என ஜனாதிபதி தெரிவித்தார்.

சகோதரத்துவத்துடன் செயற்படும் ஒரு நாடே எமக்கு தேவைப்படுகிறது. மற்றுமொரு சந்தேகத்துடன் பார்க்காத ஏனையோர் அன்புடன் பார்த்துக் கொள்ளும் இளைஞர்களே எமக்கு தேவைப்படுகின்றனர். அதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் என ஜனாதிபதி குறிப்பிட்டார். 

இதேவேளை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(16) பிற்பகல் யாழ்ப்பாணம் - நயினாதீவு புராண விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதியை நயினாதீவு புராண விகாரையின் தேரர் நவந்தகல பதும ஆசீர்வதித்தார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.