பிரதமரின் பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

மனித வாழ்வியலானது இயற்கையோடு எத்துணை பின்னிப் பிணைந்துள்ளது என்பதை தைப்பொங்கல் திருநாள் உலகுக்கு எடுத்துரைக்கிறது - பிரதமர்

by Staff Writer 15-01-2026 | 8:04 PM

Colombo (News1st) மனித வாழ்வியலானது இயற்கையோடு எத்துணை பின்னிப் பிணைந்துள்ளது என்பதை தைப்பொங்கல் திருநாள் உலகுக்கு எடுத்துரைப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாம் அனைவரும் இயற்கையின் படைப்புக்களே என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இயற்கையை மீறி எம்மால் எந்தவொரு பயணத்தையும் முன்னெடுக்க முடியாது எனவும் இயற்கையினால்  கிடைக்கப்பெற்ற ஆசீர்வாதங்களுக்குக் கைமாறு செய்வது மிக உயர்ந்த மனிதப் பண்பாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு என்ற ரீதியில் நாம் இன்று ஒரு தீர்க்கமான மாற்றத்தின் விளிம்பில் நிற்பதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

கொள்கை மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்கள் ஊடாக உளரீதியாகவும் மாற்றத்தை ஏற்படுத்தி, தேசத்தை ஒரு 'மறுமலர்ச்சி யுகத்தை' நோக்கி இட்டுச் செல்லும் பாரிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளதாக பிரதமர் தமது தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சவால்கள் நிறைந்ததாக இருப்பினும் ஒரு அரசாங்கமாக அந்தப் பொறுப்பை ஏற்று தேசத்தின் பரிணாம வளர்ச்சிக்கான புதிய வருடத்தை உறுதியுடன் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நாட்டின் சுபீட்சத்திற்காக தாம் மேற்கொள்ளும் இந்த அர்ப்பணிப்பான பயணமும் ஒரு நற்பயிரை வளர்ப்பது போன்றதே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தருணத்தில் இயற்கையைப் போற்றி நன்றி செலுத்தும் தைப்பொங்கல் பண்டிகை வளமான கலாசார விழுமியங்களைக் கொண்ட பிரஜைகளை உருவாக்க எமக்கு வழிகாட்டுவதாக பிரதமர் தமது தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஒருவரையொருவர் மதித்தல், பிற மத மற்றும் கலாசார உரிமைகளைப் பேணுதல் போன்ற உயரிய பண்புகளுடன் நல்லிணக்கம் மிக்க ஒரு புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இந்தத் தைப்பொங்கல் திருநாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி பூண வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.