அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு

புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று.

by Staff Writer 09-01-2026 | 1:45 PM

COLOMBO (News 1st) - டித்வா புயலினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று (09) நடைபெற்றது. 

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இந்தத் திட்டம் ஆரம்பமானது. அனுராதபுரம், குருநாகல் மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பமானதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ, ஹந்துன்கம, இராஜாங்கனை, சிறிமாபுர பகுதிகளில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறற்றன.

அத்துடன், குருநாகல் மாவட்டத்தில் நிகவரெட்டிய, விதிகுலிய சந்தி ,ரிதிகம, தொடம்கஸ்லந்த பகுதிகளை மையமாகக் கொண்டு இந்த நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அனர்த்தங்களினால் 6500 வீடுகள் முற்றாக சேதமடைந்தன.
113,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் கீழ் முழுமையாக சேதமடைந்த வீடொன்றுக்கு  50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

முதல் கட்டத்தின் கீழ் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக  காணி வைத்திருக்கும் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலக தெரிவித்தார்.
.