கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யும் சாத்தியம்

கடும் காற்று பலத்த மழை பெய்யும் சாத்தியம் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

by Staff Writer 09-01-2026 | 10:58 AM

Colombo (News 1st) இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (09)மாலை பொத்துவில் மற்றும் திருகோணமலைக்கிடையில் இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவும் வாய்ப்புள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது மேலும் வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மட்டக்களப்பிலிருந்து 160 கிலோமீற்றர் தொலையில் கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது.

இந்த பாதிப்பினால் வடக்கு,கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

இதனிடையே மறுஅறிவித்தல் வரை நாட்டைச் சூழவுள்ள ஆழமான, ஆழமற்ற கடற்பகுதிகளில் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவு பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மத்தியம, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் கம்பஹா, கொழும்பு மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சில பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

அதிக மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மலைப்பகுதிகளில் ஏற்படக்கூடிய திடீர் மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.