.webp)

Colombo (News 1st) வங்காள விரிகுடாவின் தென்கிழக்கே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறித்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து பின்னர் நாட்டின் கிழக்கு கடற்கரையை அண்மிக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், நாளை(08) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும்.
ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, மாத்தளை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடைக்கிடையே 50 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழைப் பெய்யலாம் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு, மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீட்டர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பகுதிகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அறிக்கைகளை தொடர்பில் கவனம் செலுத்துமாறு மீனவ மற்றும் கடற்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களிடம் திணைக்களம் கோரியுள்ளது.
இதனிடையே, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச செயலகப் பிரிவு, நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன, வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய, மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலகப் பிரிவு, நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த, மத்துரட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சேனாநாயக்க சமுத்திரம், யான்ஓயா, கந்தளாய் நீர்த்தேக்கம் உள்ளிட்ட 22 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
போம்ருஎல்ல, பதுலுஓயா, தெமோதரை நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட மத்திய அளவிலான 21 நீர்த்தேக்கங்களும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்து தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரியுள்ளது.
