.webp)

Colombo (News 1st) நாட்டின் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த வளிமண்டல தளம்பல் நிலை, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் நாளை மறுதினம்(08) முதல் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.
கிழக்கு, மத்திய, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, இரணைமடு குளத்தின் 06 வான்கதவுகள் இன்று காலை திறக்கப்பட்டுள்ளன.
இதனால் தாழ்நிலப் பகுதியிலுள்ளவர்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக கண்டி - கலஹா நில்லம்பை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வான்கதவு திறக்கப்பட்டுள்ளது.
