.webp)

Colombo (News 1st) அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட Minderoo அறக்கட்டளை, கம்மெத்தவிற்கு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கம்மெத்த முன்னெடுக்கும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்படுகின்றது.
கடந்த வருடம் நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட டித்வா சூறாவளி காரணமாக இலங்கை வரலாறு காணாத இன்னல்களை சந்தித்தது.
Minderoo அறக்கட்டளையானது அவுஸ்திரேலியாவில் தன்னார்வ பணிகளில் ஈடுபட்டு வரும் ஒரு ஸ்தாபனமாகும்.
சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்காக இந்த நிறுவனத்தின் பணிகள் உலகளாவிய ரீதியில் வியாபித்துள்ளது.
உக்ரைன், காஸா, சிரியா, லெபனான், கொங்கோ குடியரசு, சூடான் மற்றும் பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட இடர் நிலைமைகளின் போது Minderoo அறக்கட்டளை பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது.
ஒரு தொண்டு நிறுவனமாக கம்மெத்த போன்ற உள்நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஆதரிப்பதன் மூலம் மக்களின் வாழ்க்கை மீளக் கட்டியெழுப்ப தேவையான நம்பிக்கையை ஏற்படுத்துவதாக Minderoo அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி John Hartman தெரிவித்தார்.
இந்த முக்கியமான தருணத்தில் Dr. Andrew Forrest மற்றும் Nicola Forrest ஆகியோருக்கு நன்றியுடையவர்களாக இருப்பதுடன் பேரிடரிலிருந்து மீண்டெழுவதற்கான ஆதரவையே இலங்கை எதிர்பார்க்கின்றதாகவும் இந்த இலக்கை அடைய Minderoo அறக்கட்டளை ஆதரவளிக்கும் எனவும் John Hartman மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த உதவி உணர்வுபூர்வமான செயற்பாட்டின் பிரதிபலிப்பாகும் என மகாராஜா ஊடக வலையமைப்பின் குழுமப் பணிப்பாளரும் கம்மெத்தவின் தலைவருமான ஷெவான் டெனியல் தெரிவித்தார்.
எந்தவொரு சமூகமும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதை Minderoo அறக்கட்டளை மற்றும் கம்மெத்த ஆகியன நோக்காகக் கொண்டுள்ளதென ஷெவான் டெனியல் மேலும் தெரிவித்தார்.
