வீட்டுத் திட்டங்களில் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்

அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

by Staff Writer 03-01-2026 | 6:43 PM

Colombo (News 1st) 2026 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

"தமக்கென ஒரு இடம் -  அழகான வாழ்க்கை" தேசிய வீட்டுத் திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத் திட்டங்கள் மற்றும் தற்போதைய செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் நேற்று(02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

குறித்த திட்டங்களின் செயற்பாடுகளை ஒரே நிறுவனத்தின் கீழ் மேற்பார்வை செய்வதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

2026 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 10 ஆயிரத்து 200 மில்லியன் ரூபா செலவில் செயற்படுத்தப்படும் வீட்டுத் திட்டம் மற்றும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்காக 5,000 மில்லியன்  ரூபா செலவில் செயற்படுத்தப்படும் வீட்டுத் திட்டங்களின் திட்டமிடல், செயற்பாடுகள் மற்றும் நிறைவு செய்யவுள்ள காலக்கெடு தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தினார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கடந்த ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு இன்னும் பூர்த்தி செய்யப்படாத வீட்டுத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்வது குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.