COLOMBO( News 1st)
இலங்கை மின்சார சபையின் சொத்துக்களை 06 புதிய நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பெப்ரவரி முதலாம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளருக்கு எழுத்து மூலமாக இது தொடர்பான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்திற்கமைய அதனை 06 நிறுவனங்களின் கீழ் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் முறையாக உரிய நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனங்களுக்கு ஊழியர்களை பரிந்துரைக்கும் நடவடிக்கை ஏற்கனவே நிறைவடைந்துள்ளதுடன் இது தொடர்பில் விருப்பமற்றவர்களுக்கு தமது விருப்பத்திற்கமைய ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2173 ஊழியர்கள் ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களுக்குரிய இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்திற்குள் நிறைவு செய்யப்படுமென, வலுசக்தி அமைச்சினால் மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் நிறைவில் இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டு முடிவுறுத்தப்படுவதுடன் அதன் பின்னர் அதன் நடவடிக்கைகள் புதிய 06 நிறுவனங்களின் கீழ் நடாத்திச் செல்லப்படவுள்ளன.