காலி மாநகர சபையின் 05 உறுப்பினர்கள் கைது

காலி மாநகர சபையின் 05 உறுப்பினர்கள் கைது

by Staff Writer 31-12-2025 | 3:56 PM

Colombo (News 1st) காலி மாநகர சபையின் 05 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சியின் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரபாத் செனெவிரத்ன, மொஹொமட் யெசீர், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜிலீத் நிஷாந்த, கபில கொஹொம்பன்னே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிமாலி சம்பிகா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி மாநகர சபை நேற்று(30) விசேட கூட்டத்திற்காக அழைக்கப்பட்டிருந்த போது கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நகர சபையின் செயலாளரை தாக்கியமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி மாநகர சபைக்குள் நேற்று ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களே குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டிருந்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் ஆளுகைக்குட்பட்ட காலி மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கடந்த அமர்வின் போது வரவு - செலவு திட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டவிரோதமானது என தெரிவித்து நேற்றைய சபை நடவடிக்கைகள் ஆரம்பமான சந்தர்ப்பத்திலிருந்து சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டனர்.

பின்னர் சபையின் செயலாளர் மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய உத்தியோகத்தர்கள் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தண்ணீர் ஊற்றினர்.