கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

by Staff Writer 30-12-2025 | 2:29 PM

Colombo (News 1st) கொழும்பு நகரை அண்மித்து நாளை(31) விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு கடமைகளுக்காக 1,200 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

போக்குவரத்து நெரிசலை குறைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வாகனப் போக்குவரத்து திட்டம் மற்றும் பாதுகாப்பு திட்டத்தை செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

கொழும்பு - கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அதிக வாகன நெரிசல் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், இந்த பொலிஸ் பிரிவுகளில் நாளை வழக்கம் போல போக்குவரத்து முன்னெடுக்கப்படுவதுடன் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் தேவைக்கேற்ப போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

கொழும்பில் நடைபாதைகளிலும் பிரதான வீதிகளிலும் இடையூறு ஏற்படும் வகையில் எந்தவொரு வாகனங்களையும் நிறுத்துவதற்கு இடமளிக்கப்படாதெனவும் அவ்வாறு போக்குவரத்து சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.