.webp)

Colombo (News 1st) கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினரான தனபாலசிங்கம் சஷீதரனை 07 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யாழ். நீதவான் முன்னிலையில் அவர் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட போது இந்த அனுமதி வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் தனபாலசிங்கம் சஷீதரன் கைது செய்யப்பட்டார்.
இதன்போது அவரிடமிருந்து 04 கிலோ 880 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், மற்றொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் தனபாலசிங்கம் சஷீதரன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நியூஸ் ஃபெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
