சர்வஜன அதிகாரம் கட்சி உறுப்பினர் விளக்கமறியலில்

லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சி உறுப்பினர் விளக்கமறியலில்

by Staff Writer 18-12-2025 | 8:15 PM

Colombo (News 1st) கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகார கட்சி உறுப்பினர் அப்துல் சமட் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குழுவொன்று கடந்த சனிக்கிழமை லங்காபுர பிரதேச சபை உறுப்பினர் அப்துல் சமட்டை சந்திப்பதற்காக சென்று உதவி கோரியிருந்த சந்தர்ப்பத்தில் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதலில் காயமடைந்த நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் வீடு திரும்பிய பின்னர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்பு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்தநபர் தாக்குலுக்கு இலக்கானமை விசாரணைகளில் வௌிகொணரப்பட்டமையினால் சர்வஜன அதிகாரத்தின் லங்காபுர பிரதேச சபை உறுப்பினர் அப்துல் சமட் கடந்த 16 ஆம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

ஒரு பிள்ளையின் தந்தையான 40 வயது நபரே தாக்குதலில் உயிரிழந்தார்.