.webp)

Colombo (News 1st) சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்படும் ஒன்ரேன்செட்ரோன் தடுப்பூசி தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஔதடங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், தேசிய ஔடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் இராசாயன கூடங்களில் பரிசோதனைகள் நடைபெறுவதாக அதன் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
வௌிநாட்டிலுள்ள இராசாயன கூடத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மருந்தை இறக்குமதி செய்யும் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஒன்ரேன்செட்ரோன் தடுப்பூசியை தயாரித்துள்ள இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அனைத்து வகையான தடுப்பூசிகளையும் நாட்டில் பயன்படுத்துவதை இடைநிறுத்துமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி பயன்பாட்டினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஒன்ரேன்செட்ரோன் என்பது வாந்தி, மயக்கம் உள்ள நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்தாகும்.
கடந்த 12ஆம் திகதி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு இந்த மருந்து பயன்படுத்தப்பட்ட பின்னர் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
பின்னர் நோயாளியின் இரத்த மாதிரிகளில் நுண்ணுயிரிகள் காணப்பட்டதுடன் மேலும் தடுப்பூசி மாதிரிகளிலும் நுண்ணுயிரிகள் காணப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் சர்ச்சைக்குரிய ஒன்ரேன்செட்ரோன் பாவனையை நிறுத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னர் தேசிய தொற்றுநோயியல் நிறுவகத்தில் உயிரிழந்த 2 நோயாளிகளுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட்டிருந்ததால் அந்த உயிரிழப்புக்களுக்கும் தடுப்பூசிக்கும் தொடர்புள்ளதா எனும் கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
