.webp)
-606184-552014.jpg)
Colombo (News 1st) அனர்த்தங்களால் வீடுகளை இழந்தவர்களுக்கும் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் வழங்குவதற்கு பொருத்தமான, தெரிவு செய்யப்பட்ட அரச காணிகள் தொடர்பான ஆவணங்கள் மாவட்ட செயலாளர்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காணி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளை, கண்டி, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் அரச காணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீரஆரச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த காணிகள் வீடுகள் நிர்மாணிக்கப்படுவதற்கு பொருத்தமான இடமா என்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் பொறுப்பு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதேவேளை, அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த, மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசித்த மக்களுக்கான குடியிருப்பு தொகுதியை நிர்மாணிக்க தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை அண்மையில் இணக்கம் தெரிவித்தது.
வீடற்றவர்களுக்கான குடியிருப்பு தொகுதிகளை அமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை முன்னெடுக்கும் பொறுப்பு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
