.webp)
-606196-552027.jpg)
Colombo (News 1st) தீ பந்தம் மூலம் மிஹிந்தலை - சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றை தீயிட்டு கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் நீதவான் சந்துனி ஹப்புஆரச்சி முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தீ பந்தத்தால் காட்டு யானையை எரித்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி அடுத்த வழக்கு தினத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் மிஹிந்தலை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த மிஹிந்தலை பொலிஸார் சில நபர்களைக் கொண்ட குழுவொன்றால் காட்டு யானை தீ பந்தம் மூலம் எரித்து கொல்லப்பட்டுள்ளதுடன் உடலில் தீப்பற்றிய நிலையில் அதிலிருந்து தப்பிப்பதற்காக காட்டு யானை கடும் சிரமங்களுக்கு மத்தியில் ஓடும் காட்சிகள் அடங்கிய காணொளியொன்று சமூக வலைத்தளத்தில் வௌியாகியிருந்ததாக மன்றில் சுட்டிக்காட்டினர்.
குறித்த காணொளியின் அடிப்படையில் குற்றம் தொடர்பான அடிப்படை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார் காட்டு யானைக்கு தீ வைக்கப்படுவதை காணொளியாகப் பதிவு செய்ததாகக் கூறப்படும் பல்கலைக்கழக மாணவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யதுள்ளதாகவும் கூறினர்.
அதனூடாக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் குற்றம் சமூகத்தில் அதீத கவனத்தை ஈர்த்துள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியிலும் விலங்கு நல அமைப்புகள் மத்தியிலும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நலின் திமுது பண்டார உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் மன்றில் நீண்ட விளக்கங்களை முன்வைத்ததுடன் தமது சேவை பெறுநர்கள் இந்தக் குற்றத்துடன் எவ்விதத்திலும் தொடர்புபடவில்லை என கூறினர்.
விசாரணைகளுக்கு தமது சேவைபெறுநர்கள் எவ்வித அழுத்தத்தையும் ஏற்படுத்தாது விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என தெரிவித்த சட்டத்தரணிகள், தமது சேவை பெறுநர்களை ஏதேனும் பிணை நிபந்தனையின் அடிப்படையிலேனும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இருதரப்பு விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதவான் சந்துனி ஹப்புஆரச்சி, சட்டத்தரணிகள் முன்வைத்த பிணைக் கோரிக்கையை நிராகரித்தார்.
மிஹிந்தலை - அம்பகஹவல பகுதியைச் சேர்ந்த 50, 48 மற்றும் 42 வயதுகளை உடைய 3 சந்தேகநபர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
