முன்னாள் அமைச்சர் C.B.ரத்நாயக்க பிணையில் விடுவிப்பு

by Staff Writer 16-12-2025 | 3:37 PM

Colombo (News 1st) ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் C.B.ரத்நாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று(16) உத்தரவிட்டது.

இந்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இ​​லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான உதவி சட்டப் பணிப்பாளர் சுலோச்சனா ஹெட்டியாராச்சி சம்பவம் தொடர்பான அனைத்து வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விடயங்களைப் பரிசீலித்த பின்னர் வழக்கை மீண்டும் விசாரணை செய்வதற்கான பொருத்தமான திகதியை வழங்குமாறு அவர் நீதிமன்றத்தை கோரினார்.

​​

சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ, பிணை சட்டத்தின்படி சந்தேகநபரை பொருத்தமான பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த பிரதம நீதவான், சந்தேகநபரை தலா 02 மில்லியன் ரூபா பெறுமதியான 02 தனிப்பட்ட பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டதுடன் சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தார்.

குறித்த வழக்கு அடுத்த வருடம் மார்ச் மாதம் 06ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

2011 மார்ச் 31ஆம் திகதி முதல் 2013 மார்ச் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தனது அதிகாரபூர்வ வருமானத்தை விட அதிகமாக 5.73 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியமைக்காக முன்னாள் அமைச்சர் C.B.ரத்நாயக்க கடந்த 2ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.