சக்தி - சிரச நிவாரண யாத்திரையில் C-130 விமானம்

சக்தி - சிரச நிவாரண யாத்திரையுடன் கைகோர்த்த அமெரிக்காவின் C-130 விமானம்

by Staff Writer 10-12-2025 | 4:03 PM

Colombo (News 1st) அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு சக்தி - சிரச நிவாரண யாத்திரை இன்று(10) வான் வழியாக பதுளை, நுவரெலியா, மொனராகலை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளுக்கு பயணத்தை ஆரம்பித்துள்ளது.

அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான C-130 விமானத்தின் ஊடாக நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

சக்தி - சிரச தலைமையகத்தில் இருந்து புறப்பட்ட குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்தளை நோக்கி இன்று முற்பகல் C-130 விமானத்தின் ஊடாக பயணத்தை ஆரம்பித்தனர்.

இலங்கையில் டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்க விமானப்படையின் 36ஆவது அவசர பதிலளிப்பு பிரிவின் படையணியினருடன் C-130 J Super Hercules ரக 02 விமானங்கள் சில நாட்களுக்கு முன்னதாக நாட்டை வந்தடைந்திருந்தன.

ஏற்பட்ட அனர்த்தங்களால் நாட்டின் வீதி கட்டமைப்பிற்கு கடுமையாக சேதங்கள் ஏற்பட்டுள்ளமையின் காரணமாக வான் வழியாக சென்று அந்த பகுதி மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது அவர்களின் நோக்கமாகும்.

சக்தி - சிரச நிவாரண யாத்திரைக்கு நீங்கள் வழங்கிய நிவாரணங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நோக்கில் நாம் இன்று அமெரிக்க விமானப் படையினருடன் கைகோர்த்துள்ளமையானது, அண்மைய வரலாற்றில் இலங்கையின் தன்னார்வ தொண்டர்களால் வழிநடத்தப்பட்ட பாரிய வேலைத்திட்டமாக அடையாளங்காணப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கும் அதிக காலம் சக்தி - சிரச நிவாரண யாத்திரை தரை, கடல், வான் வழியாக நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளித்து வருகின்றது.

சர்வோதயா அமைப்பு மற்றும் இலங்கை உயிர்காப்பு சங்கம் முப்படை ஆகிய அனைத்து தரப்பினரும் இணைந்து இலங்கை விமானப் படை மற்றும் இந்தியாவின் உதவியுடன் ஹெலிகொப்டர் மூலமும் இதற்கு முன்னர் சக்தி - சிரச நிவாரண யாத்திரை ஊடாக நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

பேரழிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விமானம் மூலம் ஆதரவை வழங்க 02 விமானங்களும் இலங்கைக்கு வந்ததாக C130 விமானத்தின் வருகை குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இந்த கடினமான காலகட்டத்தில் அமெரிக்கா இலங்கையுடன் துணைநிற்பதாகவும் நாட்டின் மீள்கட்டமைப்பு முயற்சிகளை ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.