.webp)

Colombo (News1st) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று(04) மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் மாலை வேளையில் 75 மில்லிமீட்டர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டமைக்கும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முப்படையினர், பொலிஸ், சில அரச நிறுவனங்கள், தன்னார்வக்குழு மற்றும் வௌிநாட்டு நிவாரண குழுக்களின் தலைமையில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கனமழையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் இதுவரை 479 பேர் உயிரிழந்துள்ளதுடன் காணாமற்போன 350 பேரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
188,974 பேர் 1347 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தங்களினால் கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, கண்டி, குருணாகல், கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய 04 மாவட்டங்களின் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பான சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, நுவரெலியா, கம்பஹா, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பிரதேச செயலக பிரிவுகள் சிலவற்றுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
