95 வீதிகளில் தொடர்ந்தும் போக்குவரத்து தடை - RDA

95 வீதிகளில் தொடர்ந்தும் போக்குவரத்து தடை - வீதி அபிவிருத்தி அதிகார சபை

by Staff Writer 03-12-2025 | 4:39 PM

Colombo (News 1st) நாட்டில் பலத்த மழையுடனான வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் 95 வீதிகளில் தொடர்ந்தும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது. 

எதிர்வரும் சில நாட்களுக்குள் குறித்த வீதிகளிலுள்ள தடைகள் நீக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்தார்.

வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 256 வீதிகள் சேதமடைந்தன.

அதிகார சபையின் பொறியியலாளர் குழு உள்ளிட்ட அதிகாரிகளை ஈடுபடுத்தி வீதிகளில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் 

பிரதான நகரங்கள் அனைத்திலும் வீதி தடைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆபத்தான மண்சரிவுகள் ஏற்பட்ட பகுதிகளில் ஒரு பகுதியை ஒதுக்கி ஒருவழிப்பாதையை மாத்திரம் திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே கடுகண்ணாவை பகுதியில் தடைப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியை இன்றைய தினத்திற்குள் மீள திறக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் 20 பாலங்கள் உடைப்பெடுத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்தார்.

குறித்த இடங்களின் நிலைமைகளை கருத்திற்கொண்டு தற்காலிக பாலங்களை அமைப்பதற்கும் இருபுறமும் இரும்பு பாலத்தை தாங்கியுள்ள கட்டுமானங்கள் சேதமடைந்திருந்தால் அவற்றை மறுசீரமைப்பதற்கும்  நடவடிக்கை எடுப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.