.webp)
-551617.jpg)
Colombo (News 1st) சக்தி - சிரச நிவாரண யாத்திரைக்காக சேகரிக்கப்பட்ட உலருணவுப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கும் மனிதநேயக் கைங்கரியம் தொடர்ச்சியாக இன்றும்(02) முன்னெடுக்கப்படுகின்றது.
பேரழிவு ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்படுகின்றன.
நிர்க்கதியான மக்களுக்கு கடல், தரை, வான் மார்க்கமாக நிவாரணப் பொருட்கள் தொடர்ச்சியாக கையளிக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பு பிரேபுரூக் பிளேஸிலுள்ள சக்தி - சிரச தலைமையகத்திலிருந்து நேற்று(01) பயணத்தை ஆரம்பித்த சக்தி - சிரச நிவாரண யாத்திரை குழாத்தினர் ஆராச்சிகட்டுவ பகுதியை இன்று(02) காலை சென்றடைந்தனர்.
சக்தி - சிரச நிவாரண யாத்திரையின் உலருணவு பொதிகள் மடு கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த 275 குடும்பங்களுக்கு இன்று வழங்கப்பட்டன.
இதேவேளை, மடவல கிராமத்தில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கும் உலருணவுப் பொதிகள் நேற்றிரவு விநியோகிக்கப்பட்டன.
சக்தி - சிரச நிவாரண யாத்திரை குழாத்தினர் களனியின் சப்புகஸ்கந்த மானெல்வத்த பகுதியில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உலருணவு பொதிகளை நேற்று வழங்கினர்.
திகன்வெவ, குமரகட்டுவ, பங்கதெனிய, அரக்கட்டுவ போன்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
சுமார் 750 குடும்பங்களுக்கு குறித்த உலருணவு பொதிகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட வாகனேரி பகுதியில் சக்தி - சிரச நிவாரண யாத்திரை குழாத்தினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளித்து வருகின்றனர்.
நுவரெலியா யூனிக் வியூ கிராமம், ரேஸ் கோஸ் குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ள எமது மற்றொரு குழாத்தினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்களை இன்று பகிர்ந்தளிக்கின்றனர்.
இதனிடையே, வௌ்ளவத்தை தமிழ் சங்கத்தில் சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களையும் சக்தி - சிரச நிவாரண யாத்திரை குழாத்தினர் இன்று பொறுப்பேற்றனர்.
கொழும்பு 02 பிரேபுரூக் பிளேஸிலுள்ள சக்தி - சிரச தலைமையகம், தெபானாம கலையகம், கொட்டாஞ்சேனை ஸ்ரீ சத்ய சாயி சீரடி மத்திய நிலையம் மற்றும் கண்டி சிட்டி சென்டரின் முதலாம் மாடியில் தொடர்ந்தும் நீங்கள் நிவாரணப் பொருட்களை கையளிக்க முடியும்.
மற்றுமொரு நிவாரணப்பொருள் சேகரிப்பு மையம் காலி கஹந்துவத்த பகுதியில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இது குறித்த தகவல்களை 076 552 5000 எனும் இலக்கத்திற்கு அழைத்து பெற்றுக் கொள்ள முடியும்.
அரிசி, பருப்பு, நூடில்ஸ், பிஸ்கட், சோயாமீட், டின்மீன், குடிநீர் போத்தல்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சுகாதாரப் பொருட்களையும் உங்களால் கையளிக்க முடியும்.
