.webp)

Colombo (News 1st) பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னறிவிப்புகளை விட அதிகளவில் திடீரென பலத்த மழை பெய்யுமாயின் திடீர் வௌ்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக திணைக்களத்தின் நீர் விஞ்ஞான மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் L.S.சூரியபண்டார தெரிவித்தார்.
இந்த நிலைமை மற்றும் குறித்த பகுதிகளிலுள்ள ஆறுகளின் தன்மையின் அடிப்படையிலான கடந்த கால அனுபவங்களுக்கு அமைய இன்று(25) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை வௌ்ளப்பெருக்கு அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, அனைத்து ஆறுகளுக்கும் அருகிலுள்ள தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் அப்பகுதிகள் வழியாக பயணிப்பவர்களும் நீர்ப்பாசன திணைக்களத்தினால் வௌியிடப்படும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தெற்கு அந்தமான் கடலுக்கு அருகில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் நாட்களில் வலுவடையும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென உலகளாவிய வானிலை ஆய்வுகளை தொடர்ந்து வளிமண்டலவியல் பிரிவு அறிக்கை வௌியிட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
