வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணம் செலுத்தும் வசதி

எதிர்வரும் திங்கட்கிழமை(24) முதல் வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணம் செலுத்தும் வசதி

by Staff Writer 21-11-2025 | 10:22 AM

Colombo (News 1st) வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணம் செலுத்தும் நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை(24) முதல் ஆரம்பமாகவுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சினூடாக அமுல்படுத்தப்படுகின்றது.

இதன் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.

முதல் கட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கு இடையேயான 03 மார்க்கங்கள் உள்ளிட்ட சுமார் 20 மார்க்கங்களில் வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் நடைமுறையை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்தார்.

காலி, மாத்தறை மற்றும் பதுளை வரையிலான பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

05 தனியார் மற்றும் அரச வங்கிகள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக சுமுது ரத்நாயக்க தெரிவித்தார்.

பயணிகளுக்கு மிகுதிப்பணம் வழங்குவதில் காணப்படும் சிக்கலுக்கு தீர்வு வழங்குதல் மற்றும் பஸ் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை சரியாக கணக்கிடுதல் ஆகிய வசதிகள் இதனூடாக கிடைக்கவுள்ளது.