.webp)
-551338.jpg)
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் சட்டக்கல்வி தொடர்பில் இணையத்தளங்களில் வெளியாகியுள்ள கடிதங்கள் தொடர்பில் அமைச்சர், டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் இன்று(19) வௌிக்கொணர்ந்துள்ளார்.
நாமல் ராஜபக்ஸவின் சட்டக்கல்வியை இங்கிலாந்தில் தொடர்ந்த விதம், சட்டக்கல்விக்கான சான்றிதழ் மற்றும் சட்டக்கல்லூரிக்கு உட்பிரவேசித்தமை தொடர்பில் இணையத்தளங்களில் பல கடிதங்கள் வெளியானமை குறித்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் நிர்மலா கன்னங்கர என்பவரால் இந்த தகவல்கள் வௌியிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நாமல் ராஜபக்ஸ கற்றதாகக் கூறப்படும சிட்டி யுனிவர்சிட்டி ஒஃப் லண்டனில் பெறப்பட்டதாக கூறப்படும் சான்றிதழ் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது 2009 செப்டம்பர் 15ஆம் திகதி திகதியிட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் சான்றிதழில் கைச்சாத்திட்டுள்ள உபவேந்தர் ஜூலை 23ஆம் திகதி இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உபவேந்தர் இராஜினாமா செய்து 54 நாட்களுக்கு பின்னரே சான்றிதழில் உபவேந்தராக குறித்த நபர் கைச்சாத்திட்டுள்ளதால் இது பாரிய பிரச்சினையாகும் என குறித்த ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
சிட்டி யுனிவர்சிட்டி ஒஃப் லண்டன் நிறுவனம் 2009 ஒக்டோபர் 15ஆம் திகதியே இலங்கை சட்டக்கல்லூரியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எனினும் இந்த நிறுவனத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்ததாக கூறும் பாராளுமன்ற உறுப்பினர் இலங்கை சட்டக்கல்லூரியில் இணைவதற்காக 2009 செப்டம்பர் 25ஆம் திகதியே கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தினத்தில் சிட்டி யுனிவர்சிட்டி ஒஃப் லண்டன் இலங்கை சட்டக்கல்லூரியால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Bachelor of Laws with Honours class 03 எனும் சான்றிதழே உள்ளதுடன் அதனை ஐக்கிய இராச்சியத்திலுள்ள சட்ட சபைகளுக்கு பிரவேசிக்க முடியாதெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
