பங்களாதேஷில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

பங்களாதேஷில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

by Staff Writer 14-11-2025 | 7:48 PM

Colombo (News1st) பங்களாதேஷ் தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

17,000 மேற்பட்ட பொலிஸார், எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 3 நாட்களாக டாக்கா மற்றும் பங்களாதேஷின் பிற பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் பதிவானதுடன்  வாகனங்கள் எரியூட்டப்பட்டன.

நேற்றுமுன்தினம் டாக்காவில் ரயில் மற்றும் பஸ்ஸொன்றுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் குண்டுகள் வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி நேற்றைய தினமும் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்த குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 17 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படும் நிலையில் ஷேக் ஹசீனாவுக்கான தண்டனையை அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவிக்கவுள்ளது.

பங்களாதேஷில் இடம்பெற்ற போராட்டங்களை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.