புதுடெல்லி வெடிப்பு சம்பவத்தில் பல தகவல்கள்

புதுடெல்லி வெடிப்பு சம்பவத்தில் பல தகவல்கள் வௌியாகியுள்ளன

by Staff Writer 13-11-2025 | 7:14 PM

Colombo (News1st) இந்திய தலைநகர் புதுடெல்லியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன.

இந்த வெடிப்புச் சம்பவம் டெல்லியின் 06 இடங்களை இலக்குவைத்து நடத்த திட்டமிடப்பட்டிருந்த தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியென தெரியவந்துள்ளது.

வெடிபொருளை கொண்டு செல்வதற்காக 32 கார்கள் தயார்படுத்தப்பட்டிருந்தமையும் விசாரணைகளில் வௌிவந்துள்ளதாக NDTV பத்திரிகை சேவை செய்தி வௌியிட்டுள்ளது.

இந்த வாகனங்களில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற நாளில் பயணித்த 05 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவை பழையதாக இருந்ததாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் விற்பனை செய்ய தயாராக இருந்ததாலும் கார்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தாக்குதல் இடம்பெற்ற காரின் சாரதி  அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உமர் நாபி எனும் குறித்த நபர் வைத்தியர் என்பதுடன் அவரே டெல்லி வெடிப்புச் சம்பவத்தின் பின்புலத்தில் செயற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

கார் ஓட்டுநரின் இருக்கையிலிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரியின் மூலம் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரது தாயின் மரபணுவுடன் காரிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மரபணு மாதிரி பொருந்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவின் செங்கோட்டைக்கு அருகே மெட்ரோ ரயில் நிலையத்தை அண்மித்து கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

தாக்குதலில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 15 பேர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலைமைக்கு மத்தியில் மறுஅறிவித்தல் வரை மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.