.webp)

Colombo (News1st) தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(13) பிடியாணை பிறப்பித்தது.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபரான துசித்த ஹல்லொலுவவுக்குப் பிணை வழங்கியவர் நீதிமன்றத்தில் ஆஜராக தவறியமையால் கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இந்த உத்தரவை பிறப்பித்தார்.
நாரஹேன்பிட்டி பகுதியில் துசித ஹல்லொலுவவின் வாகனத்தை தாக்கியமை மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியமை ஆகிய சம்பவங்கள் தொடர்பில் நடைபெற்றுவரும் விசாரணைகள் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சுகவீனம் காரணமாக சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாதென சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.
இது தொடர்பான மருத்துவ அறிக்கையை எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தில் சமர்பிப்பதாகவும் சட்டத்தரணி மன்றில் குறிப்பிட்டார்.
குறித்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் சார்பாக பிணைதாரர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
குறித்த பிணைதாரர் பகிரங்க நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கிற்கான பிணைதாரர் அல்ல எனவும் துசித ஹல்லொலுவவுக்கு எதிரான மற்றுமொரு வழக்கின் பிணைதாரர் எனவும் உறுதிபடுத்தப்பட்டதன் பின்னர் மேலதிக நீதவான் சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை உத்தரவை பிறப்பித்தார்.
துசித ஹல்லொலுவவின் வாகனத்திற்கு துப்பாக்கிச்சூடு நடத்தி அங்கிருந்த கடித கோப்புகளை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
